திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கரின் உருவப்படத்தை பாதுகாப்பாக வைக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கரின் உருவப்படத்தை பாதுகாப்பாக வைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் படம் விவகாரம்
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தோப்பூரில் அம்பேத்கரின் பெரிய உருவப் படம் நிரந்தரமாக வைப்பதற்கு விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலம் நடைபெற்று வந்தது. அதே இடத்தில் நேற்று அம்பேத்கர் படம் பொருத்தப்பட்டு, திறப்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வருவாய்த் துறையும், காவல்துறையும் உரிய அனுமதி பெற்று அமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அம்பேத்கர் உருவப்படம் அதே இடத்தில் அமைப்பதற்கு ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்து அறிவிக்கப்படும் என அறிவுருத்தப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் அம்பேத்கரின் உருவப் படத்தை அதே இடத்தில் அமைப்பதற்கு முடிவு அறிவிக்கும் வரை திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, நகராட்சி இளநிலை உதவியாளர் பாண்டித்துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின் அம்பேத்கர் உருவப்படத்தை நகராட்சி இளநிலை உதவியாளர் பாண்டித்துரையிடம், விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒப்படைத்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
பங்கேற்றவர்கள்
போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேலுமுத்து, திருச்செந்தூர் நகர பொருளாளர் சரண்ராஜ், தோப்பூர் கிளை செயலாளர் சிவபெருமாள், கருத்துக்கள் பரப்பு மாநில துணை செயலாளர் அமுதன் துரையரசன், மாவட்ட செய்தி தொடர்பு அமைப்பாளர் வேம்படிமுத்து, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர்முத்து, விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, உடன்குடி ஒன்றிய செயலாளர் டேவிட் ஜான்வளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் அர்ச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story