ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டி 55 பவுன் நகை பறிப்பு - என்ஜினீயர் கைது
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி 55 பவுன் நகை பறித்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் (வயது 30) வசித்து வந்தார். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையை ஒட்டியுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே குடியிருப்பு வளாகத்தில் எதிர்புறத்தில் 32 வயதான பெண், தன்னுடைய கணவருடன் வசித்து வந்தார்.
காசி விஸ்வநாதனின் மனைவியும், 32 வயதான பெண்ணின் கணவரும் பழைய நண்பர்கள். இதனால் இரு வீட்டாருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. மனைவி வேலைக்கு சென்ற பிறகு காசி விஸ்வநாதன் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் பணியாற்றி வருவார்.
அப்போது காசி விஸ்வநாதனுக்கும், 32 வயது பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போது காசி விஸ்வநாதன், தனது செல்போனில் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது கணவருடன் குடியிருப்பை விட்டு வெளியேறினார். அதன்பிறகும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட காசி விஸ்வநாதன், தன்னிடம் உள்ள ஆபாச புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து 55 பவுன் நகை வரை பறித்தார்.
மேலும் நகை, பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண், தனது கணவரிடம் கூறினார். பின்னர் இருவரும் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து காசி விஸ்வநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காசி விஸ்வநாதனின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது.
பெண்ணிடம் இருந்து பறித்த நகைகளை விற்று, அந்த பணத்தில் ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது. பின்னர் கைதான காசி விஸ்வநாதனை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story