விபத்தை தவிர்க்க தடுப்புச்சுவரில் மோதி நின்ற பஸ்: சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு பயணிகள் பாராட்டு


விபத்தை தவிர்க்க தடுப்புச்சுவரில் மோதி நின்ற பஸ்: சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு பயணிகள் பாராட்டு
x
தினத்தந்தி 15 May 2022 2:44 PM GMT (Updated: 2022-05-15T20:14:38+05:30)

விபத்தை தவிர்க்க தடுப்புச்சுவரில் மோதி சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி டிரைவருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் இருந்து போளூர் செல்லும் அரசு பஸ் செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்னையில் இருந்து திருச்சி சென்ற மற்றொரு பஸ் வேகமாக சென்றதும், பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த டிராக்டர் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் டிரைவர், டிராக்டர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் பிரேக் பிடிக்க முடியாமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததுடன், பஸ்சின் முன்பக்க சக்கரமும் கழன்றது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி பஸ்சை நிறுத்தினார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சாமர்த்தியமாக செயல்பட்ட வந்தவாசியை சேர்ந்த பஸ் டிரைவர் முருகனை, பயணிகள் வெகுவாக பாராட்டினர். பயணிகள் அனைவரும் மாற்று பஸ்கள் மூலம் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விபத்தில் சிக்கிய பஸ்சில் டீசல் டேங்க் உடைந்து டீசல் கொட்டியதால் தீ விபத்து ஏற்படாமல் இருக்க செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் வந்து பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story