முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்: திருச்சி சிவா எம்.பி.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்: திருச்சி சிவா எம்.பி.
x
தினத்தந்தி 15 May 2022 8:33 PM IST (Updated: 15 May 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

ஆறுமுகநேரி:
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
சாதனை விளக்க கூட்டம்
காயல்பட்டினம் நகர தி.மு.க. சார்பில், ஓராண்டு தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் முகமது மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் முகமது அலி ஜின்னா வரவேற்று பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், காயல்பட்டினம் நகர்மன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான ஓடை சுகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி சிவா பேச்சு
கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், ‘‘கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்படும் என பலரும், அரசியல் விமர்சகர்களும் கூறினார்கள். ஆனால் இன்றைக்கு அரசியல் விமர்சகர்கள் இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்கின்றனர். முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளும் அவர் மனதில் மக்களுக்காக எழுகின்ற எண்ணங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது.
மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை முதல்வர் உணர்ந்து செயல்படுகிறார். அவரது அணுகுமுறை மிகவும் சாதுரியமாக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காலத்தில் மக்களை காத்தவர் முதல்-அமைச்சர். உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் ஊக்கத்தொகை வழங்கினார். தேர்தல் நேரத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகளையும் விரைவில் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தருவார். இதுபோல எண்ணற்ற சாதனைகளை செய்துவரும் முதல்-அமைச்ருக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார். 
அமைச்சர் அனிதா ராதிகிருஷ்ணன்
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘தி.மு.க. இந்து விரோத கட்சி என்ற ஒரு பொய்யான பிரசாரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அதை மக்கள் நம்ப மாட்டார்கள். காரணம் தி.மு.க. அறநிலையத்துறை அமைச்சர் அந்த அளவுக்கு கோவில்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தி.மு.க. யாருக்கும் எதிரி அல்ல. அவரவர் வணங்கும் தெய்வங்களை அவரவர் வழிமுறைகளில் வணங்கி கொள்ள வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை உடையது தி.மு.க..  காயல்பட்டினத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அவை எல்லாம் இந்த ஓராண்டு காலத்தில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காயல்பட்டினம் மக்களுக்கு அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும். முதல்கட்டமாக  காயல்பட்டினத்தில் வடிகால் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
கலந்து கொண்டவர்கள்
மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் அமீது,  ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நவீன்குமார், பாலசிங், காயல்பட்டினம் நகர இளைஞரணி செயலாளர் கலீல் ரகுமான், துணை செயலாளர்கள் கதிரவன், லேண்டு மம்மி, நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story