மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயர் வெட்டிக் கொலை


மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 15 May 2022 4:05 PM GMT (Updated: 2022-05-15T21:35:47+05:30)

கல்லிடைக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரை காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது

அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரை காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது.

என்ஜினீயர்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்திமேடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் சுகுமார் (வயது 46). என்ஜினீயரான இவர் மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
இவர் நேற்று மதியம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து செம்பத்திமேட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று சுகுமாரை வழிமறித்தனர்.

வெட்டிக்கொலை
தொடர்ந்து காரில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்மநபர்களைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த சுகுமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சுகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து அலறியடித்தவாறு ஓடினர்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ (சேரன்மாதேவி), பிரான்சிஸ் (அம்பை), இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுகுமாரை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு
இறந்த சுகுமாருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுகுமார் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லிடைக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரை காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story