நிலம் ஒதுக்கி புதிய வீடுகள் கட்டி தரவேண்டும்: மத்திய மந்திரியிடம் தலித் அமைப்பினர் கோரிக்கை
மொலகால்மூருவில், அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் நிலம் ஒதுக்கி புதிய வீடுகள் கட்டி தரக்கோரி மத்திய மந்திரி நாராயணசாமியிடம், தலித் அமைப்பினர் நேரில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சித்ரதுர்கா:
வீடுகள் இடித்து அகற்றம்
கர்நாடகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றி மீட்கப்பட்டு வருகிறது. இதேபோல் சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இதனால் அதில் வசித்து வந்த மக்கள் வீடுகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். வீடுகள் இடித்து அகற்றப்பட்டதற்கு தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய மந்திரியிடம் கோரிக்கை
இந்த நிலையில் மத்திய மந்திரி நாராயணசாமி நேற்றுமுன்தினம் மாலை சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூருவுக்கு வந்தார்.
இதையறிந்த தலித் அமைப்பினர், வீடுகளை இழந்தோர்களுடன் வந்து மந்திரி நாராயணசாமியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
மொலகால்மூருவில் அரசு நிலம் என்று கூறி அதிகாரிகள் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். ஆனால் அந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் வாடகை வீட்டிலும், பொது இடங்களில் கூடாரம் அமைத்தும் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மாநில அரசு சார்பில் நிலம் ஒதுக்கி புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்கள், மத்திய மந்திரி நாராயணசாமியிடம் இதுதொடர்பான கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த கோரிக்கை மனுவை பெற்று கொண்ட மத்திய மந்திரி நாராயணசாமி, அதிகாரிகளுடன் பேசி வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
Related Tags :
Next Story