மூடிகெரே தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம்
மூடிகெரே தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
சிக்கமகளூரு:
தாக்குதல் சம்பவம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் கெலகூர், வசதாரே உள்பட பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இதனால் காட்டிற்குள் இருந்து புலி, சிறுத்தை, யானை போன்றவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளையும், பொதுமக்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடத்து வருகிறது. வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த தாக்குதல் சம்பவம் நடக்கிறது.
இந்த நிலையில் மூடிகெரே தாலுகாவில் உள்ள கம்சே கிராமத்திற்குள் நேற்று முன்தினம் 9 காட்டு யானைகள் இரை தேடி புகுந்தன. அந்த யானைகள் அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமண் கவுடா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த பாக்கு, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை தும்பிக்கையால் பிடுங்கி எரிந்தும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின.
மேலும், அந்த தோட்டத்திற்கு அருகில் இருந்த காபி பயிர்களை மிதித்து சேதமாக்கின. பின்னர் அங்கிருந்து காட்டிற்குள் சென்றன. மறுநாள் காலையில் இதுகுறித்து லட்சுமண் கவுடாவிற்கு தெரியவந்தது. தோட்டத்தில் வாழை உள்ளிட்ட மரங்கள் முறிந்து கிடப்பதை கண்டு வேதனை அடைந்தார். இதற்கிடையே வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது கிராமமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர்.
வனத்துறை நடவடிக்கை
மேலும், அரசு பிரதிநிதிகள் யாரும் கிராம மக்களின் நலனை கருதுவது கிடையாது என கூறினர். மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story