சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்


சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 10:13 PM IST (Updated: 15 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்

நெல்லிக்குப்பம்

லட்சுமிநரசிம்மர்

கடலூர் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கு, அம்ச வாகனம், சிம்ம வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 11-ந் தேதி கருடசேவை நடைபெற்றது. அதன் பின்னர் யானை வாகனத்திலும், மங்களகிரி வாகனத்திலும், வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் சாமி புறப்பாடு மற்றும் இரவில் குதிரை வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. 

தேரோட்டம்

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது‌ இதையொட்டி அதிகாலை 4.30 மணியளவில் லட்சுமி நரசிம்மர் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.  பின்னர் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து நிலையை அடைந்தது. 

நரசிம்மர்ஜெயந்தி

இதைத் தொடர்ந்து நேற்று நரசிம்மர் அவதரித்த தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், நாளை(செவ்வாய்கிழமை) புஷ்பயாகம், நாளை மறுநாள்(புதன்கிழமை) ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர். 

Next Story