தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையை கொண்டாட தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பொறையாறு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து உள்ளதாலும், தளர்வுகள் விலக்கி கொள்ளப்பட்டதாலும், கோடை வெயில் கொளுத்தி வருவதாலும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
தரங்கம்பாடி கடற்கரை
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரை மற்றும் அதன் அருகே உள்ள புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட ஓசோன் காற்று வீசுவதால் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் தரங்கம்பாடி கடற்கரைக்கு அதிகளவு வந்து செல்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் விளையாடியும், சிலர் கடலில் ஆனந்தமாக குளித்தும் மகிழ்ந்தனர்.
களை கட்டியது
சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வதால் தரங்கம்பாடி கடற்கரை களை கட்டியுள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் தரங்கம்பாடி கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் ஆழம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story