குடிநீர் தொட்டியில் செத்துக் கிடந்த கொக்கு- மருத்துவ அதிகாரிகள் ஆய்வு


குடிநீர் தொட்டியில் செத்துக் கிடந்த கொக்கு- மருத்துவ அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2022 10:37 PM IST (Updated: 15 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தொட்டியில் செத்துக் கிடந்த கொக்கு குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மெயின் ரோட்டை ஒட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொக்கு ஒன்று செத்துக் கிடந்தது. இதனை அறியாமல் அப்பகுதி மக்களுக்கு வழக்கம்போல குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது தெரு குழாய்களில் வந்த தண்ணீரில் புழுக்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தண்ணீர் பிடித்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆகவே, குடிநீர் தொட்டியை பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
 இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்பேரில் கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், ஊராட்சி செயலாளர் வரதராஜன் ஆகியோர் நேற்று பெரம்பூரில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அந்த குடிநீர் தொட்டி பிளீச்சிங் பவுடர் தூவி நான்கு முறை சுத்தம் செய்யப்பட்டது. அரசு மருத்துவ அலுவலர் சான்று அளித்த பின்னரே அப்பகுதிக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிகிறது.


Next Story