சுற்றுலா வேன் மோதி தாய், மகள் பலி
உத்தமபாளையம் அருகே, கோவிலுக்கு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி தாய்-மகள் பலியாகினர்.
உத்தமபாளையம்:
வீரபாண்டி கோவில் திருவிழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி கஸ்தூரி (36), மகள் ஸ்ரீமதி (16), மகன் ஹரிஹரன் (12) ஆகியோருடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை குமரேசன் ஓட்டினார்.
கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். உத்தமபாளையம்-கம்பம் செல்லும் புதிய பைபாஸ் சாலையில், அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அங்கு கார் ஒன்று நின்றது. அந்த காரின் கதவை டிரைவர் திடீரென திறந்தார். இதைப்பார்த்த குமரேசன், கார் கதவின் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க விலகி சென்றதாக கூறப்படுகிறது.
தாய்-மகள் பலி
அந்த நேரத்தில், கேரள மாநிலம் சபரிமலை நோக்கி சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து குமரேசன் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 4 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி, ஸ்ரீமதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமரேசன், ஹரிஹரன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேன் டிரைவர் கைது
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர் திவான் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதனை அடிப்படையாக கொண்டு தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் தாய், மகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story