தமிழகத்தில், சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது


தமிழகத்தில், சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது
x
தினத்தந்தி 16 May 2022 12:00 AM IST (Updated: 15 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில், சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று திருவாரூரில், டி.டி.வி. தினகரன் கூறினார்.

திருவாரூர்:
தமிழகத்தில், சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று திருவாரூரில், டி.டி.வி. தினகரன் கூறினார்.
பேட்டி 
திருவாரூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று வருகை தந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சோதனை காலம்
தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி காலம் என்பது தமிழக மக்களுக்கு சோதனை காலம் என அனைத்து விதத்திலும் நிரூபணமாகியுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என கூறினார்கள். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அதேபோன்று சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு விலக்கு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கூறினார்கள். ஆனால் அதற்கு எதிர்மறையாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
மக்களை பாதிக்காத வகையில் நாங்கள் செயல்படுகிறோம் என தி.மு.க. கூறுகிறார்கள். ஆனால் மக்களை பாதிப்படைய செய்வதுதான் அவர்களின் நோக்கமாகவே உள்ளது. ஆகவே தி.மு.க. வருங்காலங்களில் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 
எதிரொலிக்கும்
10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தந்தார்கள். அதனுடைய சுயரூபம் தற்போது வெளியில் தெரிந்து விட்டதால் நிச்சயம் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா நடத்துகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெறுகிறது என கூறினார். ஆனால் தமிழகத்தில் இருண்ட ஆட்சி தான் நடந்து வருகிறது. அது தான் உண்மை. 
இவ்வாறு அவர் கூறினார்.
சரியான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது
தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக சரியாக செயல்படுகிறதா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி. தினகரன், தமிழகத்தில் அ.தி.மு.க. சரியான எதிர்க்கட்சியாக நன்றாக செயல்படுகிறது என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உங்களுடைய யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார். 

Next Story