குமரியில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது; சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
குமரியில் விடிய விடிய மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்,
குமரியில் விடிய விடிய மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
விடிய விடிய மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய லேசான மழை பெய்தது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, களியல், இரணியல், தடிக்காரன்கோணம், மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதிகபட்சமாக சிற்றார் 2 பகுதியில் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பேச்சிப்பாறை பகுதியில் 62.2 மி.மீட்டர் பதிவானது.
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 16.6, சிற்றார் 1- 1.2, களியல்- 55, கொட்டாரம்- 2.4, கன்னிமார்- 4.8, குழித்துறை-38, மயிலாடி- 4.4, நாகர்கோவில்- 12.4, பெருஞ்சாணி- 26.6, பேச்சிப்பாறை- 63.6, புத்தன் அணை- 25.8, தக்கலை- 29, குளச்சல்- 14.6, இரணியல்- 11.2, பாலமோர்- 60.6, மாம்பழத்துறையாறு- 24, ஆரல்வாய்மொழி- 9, கோழிப்போர்விளை- 22, அடையாமடை- 11, குருந்தன்கோடு- 25.2, முள்ளங்கினாவிளை- 38.2, ஆனைக்கிடங்கு- 23.2, முக்கடல் அணை- 18.4 என பதிவாகி இருந்தது.
திற்பரப்பு அருவி
மலையோர பகுதியில் பெய்த மழையால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நேற்று காலை முதலே வெயில் இல்லாமல், இதமான சூழ்நிலை நிலவி வந்தது. பள்ளி கல்லூரிக்கு கோடை விடுமுறையை ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியிலும், அருவியில் எதிர்புறம் உள்ள நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல, படகுத்துறை, நீச்சல்குளம், சிறுவர் பூங்காவிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திற்பரப்பு துடுப்பு படகு, பெடல் படகு ஆகியவற்றில் உல்லாச படகு சவாரி மேற்கொண்டனர். திற்பரப்பு ரோடு குறுகலானது என்பதால் நேற்று இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரு பிரிவினர் மோதிக் கொண்ட சம்பவமும் நடந்தது.
கூடுதல் போலீசார் தேவை
விடுமுறை நாட்களில் கூடுதல் போலீசார் இப்பகுதியில் பணி அமர்த்தப்பட்டு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
Related Tags :
Next Story