ஆன்மிகத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது நாகர்கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஆன்மிகத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது என்றும், இங்கு பிற மொழி திணிப்புக்கு இடமில்லை என்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நாகர்கோவில்,
ஆன்மிகத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது என்றும், இங்கு பிற மொழி திணிப்புக்கு இடமில்லை என்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கவர்னர் தமிழிசை
குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கான கவர்னரும், புதுச்சேரி கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி கடற்கரையில் நடக்கும் பவுர்ணமி தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. நதிகள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாசார முறை ஆகும். அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாகும்.
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்
இத்தகைய நிகழ்வுகள் நமக்கு நினைவு கூறுவது என்னவென்றால் நீர்நிலைகளை நாம் ஆக்கிரமிக்க கூடாது. அவற்றை பாதுகாக்க வேண்டும். இதேபோன்று தமிழர்களின் பண்டைய கலாசார நிகழ்வுகள் நடக்கும்போது அது இளைய தலைமுறையினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைகள், வீரம், ஆளுமை திறன் மற்றும் அவர்களின் அறிவுக் கூர்மை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நமது கலாசாரங்களை அறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில் நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும் விழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி 75 நிகழ்வுகளில் நான் பங்கேற்று வருகிறேன். அதாவது 75 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வது. 75 சுதந்திர போராட்ட வீரர்களை சந்திப்பது. 75 கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறேன். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கடற்கரை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். தமிழர்களின் பெருமை உலகம் அறிந்தது. அவற்றை நாம் எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
ஆன்மிகத்தை பிரிக்க முடியாது
தமிழகத்தில் ஆன்மிகமும் தமிழும் சேர்ந்துதான் மக்களை உயர்த்தும் நிலையில் இருக்க வேண்டும். பண்டைய காலம் முதல் இன்றளவிலும் தமிழும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது. ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதில் தமிழக மக்களும் நானும் மிகுந்த உறுதியாக இருக்கிறோம். சில கட்சியினர் தமிழில் இருந்து ஆன்மிகத்தை பிரிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். இது என்றும் நடக்காது.
நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அவரவர் தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொள்ள வேண்டும். தொழில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பிற மொழிகளை கற்பது நமது எதிர்காலத்திற்கு பயன்பெறும். இதனை பிற மொழி திணிப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. இங்கு பிறமொழி திணிப்புக்கு இடமில்லை. நம்மில் பலர் தமிழ் மொழியையே முழுமையாக படிப்பதில்லை என்பது வேதனைக்குரியது. ஒரு மொழியை உயர்த்தி பிற மொழியை குறைத்து பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் இருந்தார்.
ஆரத்தி நிகழ்ச்சி
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை 5.20 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்த அவர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story