தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில், மாவட்ட தி.மு.க. சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சரும், கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், கட்சியின் தலைமை பேச்சாளர் காரைக்குடி கணேசன் ஆகியோர் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை குறித்து விளக்கி பேசினர்.
இதில், அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை இந்தியாவே கண்டு வியந்து பாராட்டுகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 60 சதவீத திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றிவிட்டார். ஏழைகளின் கோரிக்கையை முதல்-அமைச்சர் தீர்த்து வைக்க உத்தரவிட்டுள்ளார். எளிய மனிதராக முதல்-அமைச்சர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் நாளை (அதாவது இன்று) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது, என்றார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் யாரும் திராவிடர் என்று கூட கூறவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பயம். தற்போது தினமும் திராவிடம் என்கிற வார்த்தை இல்லாமல் சட்டசபை நடப்பதில்லை. கடந்த ஆட்சியில் கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் முடங்கியிருந்த நிலையில் மக்களுக்கு பணம் கொடுக்க கூறிய மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் கொடுத்தார். பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. தற்போதைய ஆட்சியில் தான் கோவில்களுக்கு அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.2,566 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. நம்மை காக்கும் 48, இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 58,193 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். சாலை விபத்துகளை தடுப்பதற்கு கரும்புள்ளி பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.
Related Tags :
Next Story