சர் ஆர்தர் காட்டனின் 219-வது பிறந்தநாள் விழா
ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டனின் 219-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மீன்சுருட்டி,
கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் 219-வது பிறந்தநாள் விழா அணைக்கரை கீழணையில் கொண்டாடப்பட்டது. இதற்கு கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி சுரேஷ்குமார், செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் நடராஜன்பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் சர் ஆர்தர் காட்டன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் கட்டிய கீழணை பகுதிகளான வடக்குராஜன், தெற்கு ராஜன், வடவர் ஆகிய அணைகள் மீது 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாளான மே 15-ந் தேதியை நீர்ப்பாசன மேலாண்மை தினமாக தமிழக அரசு அறிவித்து அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அவரது நினைவை சிறப்பிக்கும் வகையில் சென்னை பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அவர் கட்டிய அணைக்கட்டு பகுதிகளில் சர் ஆர்தர் காட்டன் சிலைகள் அமைத்திட வேண்டும். சர் ஆர்தர் காட்டன் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகமாக வெளியிட வேண்டும். ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதியில் கோதாவரியின் குறுக்கே அமைந்துள்ள தௌலீஸ்வரம் அணைக்கட்டு பகுதியில் சர் ஆர்தர் காட்டனுக்கு அருங்காட்சியகம் அமைத்து ஆந்திர அரசு சிறப்பித்துள்ளது போல், தமிழக அரசு திருச்சி முக்கொம்பு, கல்லணை பகுதியில் சர் ஆர்தர் காட்டனுக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story