மைலாப்பூர், தேரடிமலம்பட்டியில் மீன்பிடி திருவிழா


மைலாப்பூர், தேரடிமலம்பட்டியில்  மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 15 May 2022 7:13 PM GMT (Updated: 15 May 2022 7:13 PM GMT)

மைலாப்பூர், தேரடிமலம்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மைலாப்பூர் பிள்ளிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கண்மாய்க் கரையில் மடை முன்பு தேங்காய் உடைத்து சூடம் காண்பித்து வழிபட்டனர். பின்னர் வெள்ளை துண்டு வீசினர். இதனைத்தொடர்ந்து பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மைலாப்பூர், பிள்ளையார்பட்டி, அஞ்சுபுளிபட்டி, ஆரணிப்பட்டி, ஏனாதி, பிடாரம்பட்டி, நெடுவயல், கட்டையாண்டிபட்டி, கேசராபட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிராம மக்கள் ஒன்றிணைந்து கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடித்தனர். இதில் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நாட்டுவகை மீன்களான ஜிலேபி, விரால், கெண்டை, அயிரை, கெளுத்தி உள்ளிட்ட வகை மீன்களை பிடித்துச்சென்றனர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதேபோல் பொன்னமராவதி அருகே தேரடிமலம்பட்டியில் மலங்கண்மாயிலும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதில் கொன்னைப்பட்டி, செம்பூதி, மூலங்குடி, மேலமேலநிலை, செவ்வூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மீன் பிடித்தனர்.

கண்மாய்களில் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.


Next Story