நான் இருக்கும்வரை அ.தி.மு.க.வை யாராலும் அழித்துவிட முடியாது


நான் இருக்கும்வரை அ.தி.மு.க.வை யாராலும் அழித்துவிட முடியாது
x
தினத்தந்தி 16 May 2022 12:58 AM IST (Updated: 16 May 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் அழித்துவிட முடியாது என்று சசிகலா கூறினார்

ஒரத்தநாடு:
எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் அழித்துவிட முடியாது என்று சசிகலா கூறினார்
திருமண விழா
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆசைத்தம்பி-வசந்தி ஆகியோரது மகன் ஆ.ஆதவனுக்கும், கிளாமங்கலம் மதியழகன்-தனலெட்சுமி ஆகியோரது மகள் ம.அனுசியாவிற்கும் திருமண விழா தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க.வை அழித்து விட முடியாது
இந்த திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள கழக தொண்டர்களுக்கும், கழகம் ஒன்றுபடவேண்டும், வென்று காட்டிட வேண்டும் என்று தவிக்கின்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அ.தி.மு.க., உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. 
எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை(அ.தி.மு.க.) யாராலும் அழித்து விடமுடியாது. இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து தான் வந்துள்ளது. எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அந்த காலம், சோதனையான காலம்தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. 
நான் ஓயமாட்டேன்
அன்றைக்கு எப்படி கழகம் மீண்டெழுந்ததோ, அதேபோல் தற்போதும் கட்சி புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும். கொடி பிடிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் நம்முடன் இருக்கும் இந்த சூழலில் நம் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செருக்கோடும் தலை நிமிரும் என்பதை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 
இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாவேன். அதுவரை நான் ஓயமாட்டேன். நான் செல்கின்ற இடங்களிலெல்லாம் நம் கழக தொண்டர்களின் எழுச்சியை கண்கூடாக காண முடிகிறது. 
தகுந்த நேரம் வந்து விட்டது
தமிழக மக்கள் நமது புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவியின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா? என எதிர்பார்க்கும் சூழலில், இதனை விரைவில் நிறைவேற்றி காட்டுவோம். நம் கழகத்தை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்து விட்டது.
அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே குடைக்குள் கொண்டு வந்து, தன்னிகரில்லா பேரியக்கமாக உருவாக்குகின்ற உயர்ந்த பணியில் நாம் ஈடுபட்டு வரும் இந்த வேளையில், அனைவரும் ஒரே புள்ளியில் பயணித்து பொறுமை காப்பதே நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
எம்.ஜி.ஆரின் கருத்து
காலம் என்ற நியதி இல்லாமல் எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை. எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். கூறிய ஒரு கருத்தை நினைவு கூர விரும்புகிறேன். இயற்கை நமக்கு மறதிைய தந்திருக்கிறது, நினைவையும் தந்திருக்கிறது. சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் நிச்சயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். சில விஷயங்களை நாம் மறந்துவிட வேண்டும்.
தீமையை மறந்து விட வேண்டும்
நமக்கு துன்பம் நேர்ந்ததை, துன்பத்தால் இழந்ததை, கெடுதியை, தீமை உண்டாக்கியதை நாம் நிச்சயமாக மறந்துவிட வேண்டும்.அப்படி செயல்பட்டால் நம் இயக்கம் வலிமை பெறும்.
இவ்வாறு அவர் பேசினார். 
இந்த நிகழ்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story