கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிய தஞ்சை
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தஞ்சை மாறியுள்ளது.
தஞ்சாவூர்:
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தஞ்சை மாறியுள்ளது.
கொரோனா தொற்று
சீனாவில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு வேகமாக பரவியது. இதனால் அந்தந்த நாடுகள் தங்கள் மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த தொற்று இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவ தொடங்கியது. இதுபடிப்படியாக அதிகரித்து இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் இந்தியாவிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்அலை, 2-வது அலை, 3-வது அலை என 3 அலைகளாக கொரோனா தொற்று உருமாறி மக்களை தாக்கியது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி முதல் கொரோனா தொற்று பதிவானது. மேற்கிந்திய தீவில் இரந்து கும்பகோணத்திற்கு வந்த ஆண் ஒருவருக்கு முதன்முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியது.
குறைய தொடங்கியது
முதல் அலையை விட 2-வது அலை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகளின் போர்க்கால நடவடிக்கைகளாலும், தடுப்பூசி பயன்பாட்டினாலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் மக்களை பாதுகாக்க முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், இடைவெளியை கடைபிடித்தல் என பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன்காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது.
அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் 3-வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது முற்றிலுமாக குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று புதிதாக யாருக்கும் கண்டறியப்படவில்லை. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
தொற்று இல்லாத மாவட்டம்
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தஞ்சை மாவட்டம் மாறியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 92 ஆயிரத்து 168 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 91 ஆயிரத்து 129 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 1,039 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story