108 ஆம்புலன்சை சேதப்படுத்திய 3 பேர் கைது
மதுரையில் 108 ஆம்புலன்சை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை உத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பர்வீன் (வயது 35). 108 ஆம்புலன்சு வாகனத்தில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜமீலா பர்வீன் பணியில் இருந்தபோது, கொடிக்குளம் அருகே உள்ள மலையாண்டிபுரம் விக்டர் நகர் பெரியாறு கால்வாய் பாலத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜமீலா பர்வீன் ஆம்புலன்சு வாகனத்தில் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது கால்வாய் பாலத்தில் மதுபோதையில் மலையாண்டிபுரத்தைச் சேர்ந்த தங்கம் என்பவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து கிடந்துள்ளார். அவர் அருகே நண்பர்கள் 3 பேர் மதுபோதையில் இருந்துள்ளனர். இதையடுத்து தங்கம் மற்றும் நண்பர்களை 3 பேரையும் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ஜமீலா பர்வீன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் ஜமீலா பர்வீனை தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடி மற்றும் உட்பாகங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமீலா பர்வீன் அளித்தப்புகாரின்பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்சு வாகனத்தை அடித்து நொறுக்கிய அரும்பனூர் புதூரை சேர்ந்த பாண்டி ஹரிகரன் (35), மலையாண்டிபுரத்தை சேர்ந்த ஜெயபாலன் (23), மலைச்சாமி (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story