மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு
அபிராமம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கமுதி, மே.
அபிராமம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓட்டல் வேலை
கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகம் மணிபுரம் ஊரைச் சேர்ந்த சேகர் மகன் ஆரோன் (வயது 24). கேட்டரிங் படித்து விட்டு அபிராமம் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை.
சம்பவத்தன்று மணிபுரத்தில் உள்ள பொது குளிக்கும் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குளிக்கும் தொட்டி மேல் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து ஆரோன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ஆரோன் கீழே விழுந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கோரிக்கை
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் மின் வயர் இந்த பகுதியில் தாழ்வாக செல்வது குறித்து பலமுறை பொதுமக்கள் மின்சாரத்துறையிடம் புகார் அளித்தும், கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மின்சார துறையின் அலட்சியம் காரணமாக ஆரோன் உயிரிழந்து விட்டார். இதற்கு சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த ஆரோன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அரசு பணி வழங்க வேண்டும் என உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், கமுதி தாசில்தார் சிக்கந்தர் பபிதா, கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆரோன் உடலை வாங்க மாட்டோம் என பிடிவாதம் செய்தனர்.
விசாரணை
உயர் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியத்திடம் உரிய நஷ்டஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி ஆர்.டி.ஓ. முருகன் உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஆரோன் தாயார் சின்னதாய் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய ராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story