பெரம்பலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்
பெரம்பலூரில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரம்பலூர்,
போக்குவரத்து நெரிசல்
பெரம்பலூர் நகரானது போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகும். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும்.
வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகளுக்கு செல்லும் நபர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி, போக்குவரத்துக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் தடை செய்யப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடிக்கடி விபத்து
இதனால் சாலையின் ஓரமாக பாதசாரிகள் செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பின்னால் வரும் பஸ்கள், கனரக வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு ஒதுங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சிலர் சாலையின் மையப்பகுதியில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு செல்போன் பேசுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்தபகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும், சாலையோரத்தில் தேவையில்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் திரும்பி செல்லும் சாலையில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் பஸ்கள் திரும்ப முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பாலக்கரை ரவுண்டானா அருகேயும் பஸ்களில் இருந்து இறங்கும் பயணிகளை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போட்டி போட்டு கொண்டு தங்களது ஆட்டோவில் ஏற்றுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட நிறுத்தம் இல்லாமல் எல்லாம் இடங்களிலும் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்வதால் அதன் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதேபோல் காமராஜர் வளைவு, பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டு கொள்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலரும், போக்குவரத்து போலீசாரும் ஷேர் ஆட்டோக்களை குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story