ஆசிரியரின் காலைத்தொட்டு வணங்கிய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி


ஆசிரியரின் காலைத்தொட்டு வணங்கிய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி
x
தினத்தந்தி 16 May 2022 2:27 AM IST (Updated: 16 May 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

47 ஆண்டுக்குப்பிறகு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் சந்தித்து காலைத்தொட்டு வணங்கினார். நாகர்கோவிலில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாகர்கோவில்:
47 ஆண்டுக்குப்பிறகு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் சந்தித்து காலைத்தொட்டு வணங்கினார். நாகர்கோவிலில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஐகோர்ட்டு நீதிபதி வருகை
சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி கடந்த 2021-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என்.கிருபாகரன். இவருடைய பணிக்காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர் என்ற சிறப்பைப் பெற்றவர். நேற்று நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நீதிபதி கிருபாகரன் வந்திருந்தார். அவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
இவர் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள நெடும்பிறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது கணக்கு ஆசிரியராக இருந்தவர் குமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த எம்.முகமது ஹனீபா. ஓய்வு பெற்ற இவர், தனது சொந்த ஊரான மாதவலாயத்தில் வசிப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் நீதிபதி கிருபாகரனுக்கு தெரிய வந்தது. 
இதையடுத்து அவருடைய செல்போனில் தொடர்பு கொண்ட நீதிபதி கிருபாகரன், நான் 15-ந் தேதி (அதாவது நேற்று) நாகர்கோவிலுக்கு வருகிறேன், அப்போது உங்களது வீட்டுக்கு வந்து உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நெகிழ்ச்சிகரமான சந்திப்பு
ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த தனது மாணவனை, வீடுதேடி வரவழைத்து கஷ்டப்படுத்த விரும்பாத முகமது ஹனீபா நேற்று காலையில் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி கிருபாகரன் தங்கியிருந்த அறைக்கே வந்து சந்தித்தார். நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு ஆசிரியரும், மாணவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டது இருவரையும் மிகுந்த மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.
இந்த மகிழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன், ஆசிரியரின் காலைத்தொட்டு வணங்கி ஆசி பெற்றார். ஆசிரியர் முகமது ஹனீபாவும் தனது மாணவனை ஆரத்தழுவி வாழ்த்தினார். தன்னிடம் படித்த மாணவன் ஐகோர்ட்டு நீதிபதியாகும் அளவுக்கு உயர்ந்ததை எண்ணிய ஆசிரியரின் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வழிந்ததையும் காண முடிந்தது. பின்னர் நீதிபதி கிருபாகரன், ஆசிரியருக்கு சால்வை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் அவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை செய்தார். பின்னர் இருவரும் அவரவர் குடும்ப விவரங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது நீதிபதி கிருபாகரன் பள்ளி மாணவரைப் போன்று, ஆசிரியர் முன் கை கட்டி மரியாதையாக நின்றார். அவரை ஆசிரியர் தன்னுடன் அமர வைத்து பேசினார். 47 ஆண்டுக்கு பிறகு ஆசிரியர்- மாணவரின் இந்த சந்திப்பு நெகிழ்ச்சிகரமாக இருந்தது.
மகிழ்ச்சியை தருகிறது
இந்த சந்திப்பு குறித்து ஆசிரியர் முகமது ஹனீபா மனம் நெகிழ்ந்து கூறியதாவது:-
நான் நீதிபதி கிருபாகரன் ஊரில் உள்ள பள்ளியில்தான் முதன்முதலாக கணக்கு பாட ஆசிரியராக 1973-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அப்போது கிருபாகரன் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். அந்த பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றினேன். அதன்பிறகு செய்யாறு பள்ளியில் 9 ஆண்டுகள் பணியாற்றினேன். 1985-ம் ஆண்டு முதல் குமரி மாவட்டத்தில் பணியாற்றினேன். இறுதியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.
தற்போது அவர் என்னை சந்தித்து மாணவர் என்ற முறையில் செய்த மரியாதை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மாணவர்கள் தரும் அன்பும், மரியாதையும், அவர்கள் உயர்ந்த இடத்துக்கு வருவதும்தான் ஆசிரியர்களாகிய என்னைப்போன்றோர்களுக்கு அவர்கள் தரும் பரிசு.
பிள்ளைகளாக நினைத்தால்...
சமீப காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களால் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பாலியல் உணர்ச்சிகளை ஆசிரியர்கள் மாணவர்கள் மீது காட்டக்கூடாது. அவர்களை தங்களது பிள்ளைகள்போல் நினைத்தால் எந்த தவறும் நிகழாது. பெற்றோருக்கு ஒரு குழந்தைதான். ஆசிரியர்களுக்கு தங்களது வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் குழந்தைகள்தான். இதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story