பார்வதாம்பா கோவில் தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
குண்டலுபேட்டை பார்வதாம்பா கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொள்ளேகால்:
பார்வதாம்பா மலைக்கோவில் தேரோட்டம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பிரசித்தி பெற்ற பார்வதாம்பா மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தேர்திருவிழா கடந்த 3 நாட்கள் முன்பு தொடங்கி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பார்வதாம்பா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைதொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
இதில் கம்பேகாலா கிராமத்தை சேர்ந்த சர்பபூஷன்(வயது 27), சுவாமி(40) மற்றும் கூடசோகே கிராமத்தை சேர்ந்த கரிநாயக்(50) ஆகிய 3 பேரும் தேர் வடத்தை முன்பகுதியில் நின்று இழுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது சர்பபூஷன் உள்பட 3 பேரும் தேர் சக்கரத்தில் சிக்கினர். இதையறிந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பதை நிறுத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த சர்பபூஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் உயிருக்கு போராடினர். அவர்களை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக் காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சுவாமி பரிதாபமாக உயிரிழந்தார். கரிநாயக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
சம்பவம் அறிந்து எம்.எல்.ஏ. நிரஞ்சன் குமார் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், காயம் அடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சர்பபூஷன், சுவாமி ஆகியோரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குண்டலுபேட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story