‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 16 May 2022 2:56 AM IST (Updated: 16 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பை
கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் கலராமணி பிரிவு உள்ளது. இந்த பிரிவு பகுதியில் இருந்து கலராமணிக்கு ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டின் ஓரத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த ரோடு வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பைகள் பறந்து வந்து விழுகிறது. மேலும் அந்த குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தங்களுடைய மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ரோட்டோரம் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி. 


சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
அந்தியூரை அடுத்த பர்கூரில் உள்ள மலைப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மலைப்பகுதியில் உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. மேலும் வனவிலங்குகளால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், தாமரைக்கரை.

விபத்தை தடுக்க... 
ஈரோடு சம்பத்நகரில் இருந்து அண்ணா தியேட்டர் செல்லும் ரோட்டில் நடை மேம்பாலம் உடைந்து கிடந்தது. அந்த உடைப்பை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சரிசெய்தனர். ஆனால் அந்த பாலத்தில் கற்களை அப்படியே போட்டு சென்று விட்டனர். இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சம்பத் நகர். 

தேங்கி நிற்கும் கழிவுநீர்
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் பழைய போஸ்ட் ஆபீஸ் வீதியில் கழிவு நீர் செல்ல சாக்கடை வடிகால் வசதி உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீதியில் ஓடுகிறது. இதனால் அந்த வீதியில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காமல் சாக்கடையை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காமேஷ், சத்தியமங்கலம்.

முதலுதவி பெட்டி இல்லை
பஸ்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் ஒருசில அரசு பஸ்களில் முதலுதவி பெட்டிகள் இருப்பதில்லை. குறிப்பாக ஈரோட்டில் இருந்து தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களிலும் முதலுதவி பெட்டி இல்லாமல் இருப்பது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பயணத்தின்போது காயம் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து அரசு பஸ்களிலும் கட்டாயம் முதலுதவி பெட்டிகளை வைப்பதற்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஸ், ஈரோடு.


மின் கம்பத்தில் செடி-கொடிகள்
அந்தியூரை அடுத்த வெள்ளையம்பாளையத்தில் தெருவிளக்கு ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. மேலும் மின் கம்பத்தில் பொருத்தப்பட்ட பியூஸ் கேரியரில் இருந்து ஒயரும் தொங்கி கொண்டு இருக்கிறது. எனவே ஏதேனும் பெரிய மின் விபத்து ஏற்படும் முன் செடி, கொடிகளை அகற்றுவதுடன், தொங்கி கொண்டிருக்கும் ஒயர்களையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவீந்திரன், புதுப்பாளையம்.


Next Story