மகளுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


மகளுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 3:04 AM IST (Updated: 16 May 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மகளுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலத்தில் மகளுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளுடன் தகராறு

சேலம் கோட்டை அண்ணாநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது 35). இவரது கணவர் சிவக்குமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு லாவண்யா (14) என்ற மகள் உள்ளார். இவர், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த தாய், மகளுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த ஜோதியின் தாய் ராணி, பேத்தி லாவண்யாவை வெளியில் அழைத்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து லாவண்யா தனது வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

தாய் தற்கொலை

இதையடுத்து உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, அங்கு சேலையில் ஜோதி தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜோதியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து ஜோதியின் தாய் ராணியிடம் விசாரணை நடத்தினார். அதில், ஜோதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததால் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாகவும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாரிடம் ராணி கூறினார். இருப்பினும், மகளுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையால் இதுபோன்ற விபரீத முடிவு எடுத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story