விசாரணைைய விரைவுபடுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்
திட்டுவிளையில் சிறுவன் மர்மமான முறையில் இறந்த வழக்கு விசாரணையை விரைவு படுத்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அழகியபாண்டியபுரம்:
திட்டுவிளையில் சிறுவன் மர்மமான முறையில் இறந்த வழக்கு விசாரணையை விரைவு படுத்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாட்டி வீட்டுக்கு வந்த சிறுவன்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நஜிபூ. இவரது மனைவி சுஜிதா. இவர்களது 2-வது மகன் ஆதில் முகமது (வயது 12). விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
சுஜிதாவின் தாயார் வீடு பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளையில் உள்ளது. விடுமுறையையொட்டி சிறுவன் ஆதில் முகமது திட்டுவிளையில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான்.
கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து விளையாட சென்ற ஆதில் முகமது, நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை.
பிணமாக மீட்பு
இதையடுத்து 2 நாட்கள் கடந்து மணத்திட்டை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சிறுவனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. விளையாட சென்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவன் உயிரிழந்து 10 தினங்கள் ஆகியும் சாவுக்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதை கண்டித்து நேற்று திட்டுவிளை பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிறுவன் சாவுக்கு நீதி வேண்டும், விசாரணையை விரைவு படுத்தி அவரது சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், திட்டுவிளை ஜமாத் தலைவர் மைதீன் பிள்ளை, ஜூம்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் செய்யது ரஹ்மானி, திட்டுவிளை ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் சேக், அருட்பணியாளர் மரியதாசன், சி.எஸ்.ஐ. உதவி போதகர் ஜோஸ்ஜோபின், பூதப்பாண்டி பேரூராட்சி செயலாளர் ஆலிவர்தாஸ், துணை தலைவர் அணில்குமார், பேரூர் அ.தி.மு.க. செயலாளர் எபிஜான்சன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாகுல் அமீது மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தளவாய்சுந்தரம் கூறும் போது, சிறுவன் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், என்றார். இந்த போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story