தாளவாடி பகுதியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தால் 2 தரைப்பாலங்கள் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு


தாளவாடி பகுதியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தால் 2 தரைப்பாலங்கள் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2022 3:15 AM IST (Updated: 16 May 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு
தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
 தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வருவதும் மாலை நேரத்தில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
அதேபோல் நேற்றும் பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மழை தூற தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. 2 மணி நேரம் தாளவாடி, தொட்டகாஞ்சனூர், சிக்கள்ளி, பாலப்படுக்கை, இக்களூர், நெய்தாளபுரம் மற்றும் வனப்பகுதியில் கன மழை கொட்டியது.
தரைப்பாலங்கள் மூழ்கடிப்பு
இந்த மழையால் ஒடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதன் காரணமாக நேற்று இரவு 8 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதே போல் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலையான கும்டாபுரம் அருகே உள்ள தரைப்பாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் கிராமத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் நீர் வடியும் வரை கரையில் காத்திருந்தனர். வெள்ளம் வடிந்ததும் கிராமத்துக்கு சென்றனர்.
அம்மாபேட்டை
இதேபோல் அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஊமாரெட்டியூர், பந்தல்கரடு ஆகிய பகுதியில் தாழ்வாக உள்ள சுமார் 4 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மழை தண்ணீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Next Story