தமிழகத்தில் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
தமிழகத்தில் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.கூறினார்.
சேலம்:
தமிழகத்தில் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.கூறினார்.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் உயர்த்தி வருகின்றனர். 50 ரூபாய்க்கு மேல் வரியாக செல்கிறது. கொரோனாவில் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற எல்லா பொருட்களும் விலை உயர்ந்து பொதுமக்களை அதிகமாக பாதித்து வருகிறது.
மாநில அரசும் தன் பங்கிற்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனால், குறைந்த வருவாய் உள்ள வாடகை வீட்டில் வசிப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வீட்டு வாடகை உயர்த்தப்படும் நிலை இருப்பதால் சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லை.
அடுத்த தலைமுறை
மதுவை நம்பி அரசு நடத்தக்கூடாது. மதுவால் வருமானம் கிடைத்தாலும், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமானால், மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களும் மது அருந்த தொடங்கி விட்டனர். கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதில் கிடைப்பதால் அதற்கு மாணவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இதுதொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மதுக்கடைகள் மூடப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் தெரிவிக்க வேண்டும். பஸ் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.
சேலம் உருக்காலை
தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஏதும் இல்லாத நிலை உள்ளது. பீகார் போன்ற வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் இங்கு வேலை செய்து வருகின்றனர்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுக்கக்கூடாது. இந்த உருக்காலை பணிக்காக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிக குறைந்த விலைக்கு தங்களுடைய நிலத்தை கொடுத்தனர். உருக்காலையை தனியாருக்கு கொடுப்பதாக இருந்தால், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தை 3 ஆக பிரிக்கவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.