உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு முகாம்: கடைகளின் உரிமம், பதிவு பெற 1,280 பேர் விண்ணப்பம்
சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடந்த சிறப்பு முகாமில் கடைகளின் உரிமம், பதிவு பெற 1,280 பேர் விண்ணப்பித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடந்த சிறப்பு முகாமில் கடைகளின் உரிமம், பதிவு பெற 1,280 பேர் விண்ணப்பித்தனர்.
உணவு பாதுகாப்பு துறை
தமிழகத்தில் உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களும், விற்பனை நிலையங்களும் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டுபவர்கள் பதிவு செய்தால் போதுமானது. அதேசமயம், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ஈட்டும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பதிவு அல்லது உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தை பொறுத்த வரையில் 8 ஆயிரத்து 97 கடைகள் எந்தவித பதிவு பெறாமலும், 267 நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமலும் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1,280 பேர் விண்ணப்பம்
இந்தநிலையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு சார்ந்த கடைகள், நிறுவனங்கள் உரிமம் பெறவும், பதிவு பெறுவதற்காகவும் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என மொத்தம் 22 இடங்களில் நடந்த முகாமில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில், உணவு நிறுவனங்களை நடத்தி வரும் ஏராளமானோர் கலந்து கொண்டு பதிவு மற்றும் உரிமம் பெற விண்ணப்பித்தனர். நிறுவனங்களுக்கு உரிமம் பெற 126 பேர், கடைகளை பதிவு செய்ய 1,154 பேர் என மொத்தம் 1,280 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பதிவு மற்றும் உரிமம் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.