நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்


நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2022 4:24 AM IST (Updated: 16 May 2022 4:24 AM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சேலம்:

நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஜவுளி தொழில் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் ஏராளமான கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழிலுக்கு மூல ஆதாரமாக திகழும் நூல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் சரவணன் கூறியதாவது:-

நூல் விலை உயர்வு

பஞ்சு விலையேற்றத்தால் நூல் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பருத்தி தேவை 330 லட்சம் பேலாக உள்ளது. இதில், 180 லட்சம் பேல் பருத்தி தமிழகத்திற்கு தேவை. ஆனால் இங்கு மிக குறைந்த அளவில் தான் பருத்தி கிடைக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் நூல் ஆர்டர் கிடைக்கும். அதை ஜனவரி, மார்ச் மாதங்களில் ஏற்றுமதி செய்வோம். நூல் விலை உயர்வால் இந்த சீசனில் மட்டும் ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நூல் விலையேற்றம் செயற்கையாக உருவாக்கப்படுவதாக கருதுகிறோம். எனவே நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அப்போது தான் நூல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வரும்.

ஒருநாள் கடையடைப்பு

அனைத்து ரக நூலும் கடந்த ஒரு மாதத்தில் கிலோ ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. பஞ்சு (356 கிலோ) ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நூல் மற்றும் பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழில்களும் நசிந்து வருகிறது. எனவே, நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி இன்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story