வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா


வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா
x
தினத்தந்தி 16 May 2022 4:48 AM IST (Updated: 16 May 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா நடந்தது.

மணப்பாறை:

பால்குட விழா

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான பால்குட விழா நேற்று காலை தொடங்கியது. இதில் மாரியம்மன் கோவிலின் பின்புறமுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் பால்குட ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பால்குடத்தை சுமந்து கொண்டு பக்தி பரவசத்துடன் ராஜவீதிகளின் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

வேடபரி நிகழ்ச்சி

இதையடுத்து கோவில் பரம்பரை அறங்காவலர்களை பாராம்பரிய முறைப்படி அழைத்துச்செல்ல, அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் செல்லும் பகுதியில் பலரும் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கினர். நிகழ்ச்சியை ஆசிரியர் திருவாச நல்லுசாமி தொகுத்து வழங்கினார்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் மற்றொன்றான வேடபரி நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பட்டு ராஜவீதிகளின் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைகிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கரும்பு தொட்டில், கரும்புள்ளி, செம்புள்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

விழாக்கோலம்

முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்வதற்கு முறையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, இடையூறின்றி ராஜ வீதிகளில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவில் செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் தலைமையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மணப்பாறை நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், மணப்பாறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் இல்லாததால் மகிழ்ச்சி

மணப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. மேலும் பால்குட விழா நடைபெறும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்குமோ? என்று ெபாதுமக்கள் எண்ணிய நிலையில், நேற்று வெப்பத்தின் தாக்கமின்றி வானம் மேகமூட்டமாக காட்சி அளித்ததுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் வெப்பத்திற்கு விடைகொடுத்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்படுத்திய வேப்பிலை மாரிக்கும், வருணபகவானுக்கும் நன்றி தெரிவித்தனர். பால்குட விழா முடிந்ததும் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பக்தர்கள்

பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்ததால், சாலையில் வழியே இல்லாத நிலையில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இந்நிலையில் கோவில்பட்டி சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர தேவைக்காக சென்றது. அதைப்பார்த்த பக்தர்கள் சில வினாடிகளில் ஒதுங்கிக் கொண்டு ஆம்புலன்சிற்கு வழிவிட்டனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் எந்தவித இடையூறுமின்றி சென்றது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஆம்புலன்சுக்கு பக்தர்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பக்தர்களுக்கு உதவிய போலீசார்

சித்திரை திருவிழாவில் பால்குட விழாவிற்கு காப்பு கட்டி, விரதம் இருந்த பக்தர்கள், பயபக்தியுடன் பால்குடம் எடுத்து வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், பாலாபிஷேகம் செய்த பின்னர் தங்களின் காப்புகளை அவிழ்த்துவிட்டு செல்வார்கள். அதன்படி நேற்று பக்தர்கள் காப்புகளை அவிழ்க்க மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் உதவி செய்தது காண்போரை நெகிழ வைத்தது.


Next Story