ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 16 May 2022 12:27 PM IST (Updated: 16 May 2022 12:27 PM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடினர்.

பென்னாகரம்:
கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடினர்.
சுற்றுலா தலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்கின்றனர்.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பரிசலில் சென்று உற்சாகம்
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர்.
தீவிர கண்காணிப்பு
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மேலும் மீன் மார்க்கெட், மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக இருந்தது.
ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். மேலும் மெயின் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story