ஸ்கூட்டர் திருடிய போலி அதிகாரி சிக்கினார்


ஸ்கூட்டர் திருடிய போலி அதிகாரி சிக்கினார்
x
தினத்தந்தி 16 May 2022 12:29 PM IST (Updated: 16 May 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஸ்கூட்டரை திருடிய போலி வருவாய் ஆய்வாளர் போலீசாரிடம் சிக்கினார்.

சேலம்:
சேலத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஸ்கூட்டரை திருடிய போலி வருவாய் ஆய்வாளர் போலீசாரிடம் சிக்கினார்.
ஸ்கூட்டர்
சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 53). இவர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த விடுதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி ஒரு நபர் வந்தார். 
அப்போது அவர் விடுதி மேலாளரிடம் தனது பெயர் பிரபாகரன் (33) என்றும், சேலம் கிழக்கு தாலுகா வருவாய் ஆய்வாளர் என்றும் கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்து ஒரு அறையில் தங்கினார்.
இதையடுத்து பிரபாகரன் அங்கு அடிக்கடி வந்து அதே அடையாள அட்டையை காண்பித்து தங்கி சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி விடுதிக்கு வந்த அவர், அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கிவிட்டு வருவதாக கூறி மேலாளர் லட்சுமணனிடம் ஸ்கூட்டரை வாங்கி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் விடுதிக்கு திரும்ப வரவில்லை.
போலி வருவாய் ஆய்வாளர்
இதுகுறித்து லட்சுமணன் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த 11-ந் தேதி பிரபாகரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காயங்களுடன் வந்தார். அப்போது அவர் ஆஸ்பத்திரி போலீசாரிடம், தன்னை கொண்டலாம்பட்டி அருகே 3 பேர் தாக்கியதாக தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வருவாய் ஆய்வாளர் என பொய் கூறி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்ததும், அந்த விடுதி மேலாளர் லட்சுமணனின் ஸ்கூட்டரை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஸ்கூட்டர் திருட்டு வழக்கில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 விசாரணை
கைதான பிரபாகரன் வருவாய் ஆய்வாளர், உதவி கலெக்டர் என கூறி சிலரிடம் உதவித்தொகை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story