கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 7 கிராம மக்கள் மறியல்


கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 7 கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 16 May 2022 5:07 PM IST (Updated: 16 May 2022 5:07 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பஸ்நிலையத்தில் திங்கட்கிழமை காலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி லக்கம்மாள்தேவி கிராமம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கோவில்பட்டி திடீர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி பஸ்நிலையத்தில் திங்கட்கிழமை காலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி லக்கம்மாள்தேவி கிராமம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கோவில்பட்டி  திடீர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பஸ் நிறுத்தம்
கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லக்கம்மாள் தேவி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலமாக விஜயாபுரி, கசவன்குன்று, செமப்புதூர், டி.சண்முகபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிமாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காலையில் 6.30 மணிக்கு சென்று வந்த அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டது.
இந்த பஸ் மூலமாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் கோவில்பட்டி பகுதிக்கு வருவர். இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் தினமும் இப்பகுதியிலுள்ள 7 கிராம மக்கள் கோவில்பட்டி வருவதற்கு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ்நிலையத்தில் மறியல்
இது குறித்து கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கிராமமக்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம். தொடர்ந்து கிராமமக்கள் தரப்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும்,  நேற்று காலையிலும் அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜக்கம்மாள்தேவி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேற்று காலையில் அண்ணா பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பஸ்நிலையத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ராஜசேகர் அங்கு வரவழைக்கப்பட்டார். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அவர், ஜக்கம்மாள்தேவி கிராமத்தில் இரவுநேரம் செல்லும் பஸ் நிறுத்தி மறுநாள் காலையில் பயணிகளை ஏற்றிவர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.  இதனை தொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.


Next Story