கடல் உணவு உற்பத்தியில் இளைஞர்கள் புதுமையை கொண்டு வரவேண்டும்: கனிமொழி எம்.பி.
கடல் உணவு உற்பத்தியில் இளைஞர்கள் புதுமையை கொண்டு வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி;
கடல் உணவு உற்பத்தியில் இளைஞர்கள் புதுமையை கொண்டு வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் கடல்சார் உணவு பொருள் வணிக மையம் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி ஆகியவை இணைந்து கடல்சார் உணவு பொருட்களில் தொழில் முனைதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தகுமார் வரவேற்று பேசினார். இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி பொதுமேலாளர் ரவீந்திரன் விளக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
கடல்உணவு
கடல் உணவு உலக அளவில மிக முக்கியமான பொருளதாரத்தை உருவாக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. 1990-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 122 மடங்கு கடல் உணவு சந்தை விரிவாகி உள்ளது. இவ்வளவு பெரிய கடற்கரையை கொண்டு உள்ள தமிழகத்தில் 4.8 சதவீதம் மட்டுமே கடல் உணவு சந்தை உள்ளது. கடல் உணவு சந்தையை பெருக்குவதற்கான வாய்ப்பு நம்மிடம் அதிகம் உள்ளது. ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் அதிகம் தேவைப்படுகிறது. உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாமல் உணவை பதப்படுத்தி கொடுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
புதுமைகள்
நம்முடைய கடல் உணவை நாம் எப்படி பதப்படுத்துகிறோம், அதில் நம்முடைய ஆராய்ச்சி என்ன என்பதை இங்கு உள்ள இளைஞர்கள்தான் கையில் எடுக்க வேண்டும். கடல்உணவில் புதுமைகளை இளைஞர்கள் கொண்டு வரவேண்டும்.
முதல்-அமைச்சர் அனைத்து வளர்ச்சியும் சென்னையை நோக்கி இல்லாமல், பரவலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆகையால் அமைச்சர் அதனை கருத்தில் கொண்டு மீன்வள பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது. தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் ஒரு புட் பார்க் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக அந்த பார்க் வளர்ச்சி பெறாமல் உள்ளது. இதனால் இளைஞர்கள் தொழில் தொடங்க முடிவு செய்தால் அந்த இடத்தை தேர்வு செய்யலாம் என்று கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன்
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, சிட்பி நிறுவனம் திறன் மேம்பாட்டு பயிற்சி மட்டுமின்றி, வங்கி கடனும் பெற்றுத்தருகின்றனர். கடல் தொழில், மீன் பதப்படுத்துதல் என்று இருந்து விடாமல், உப்புத் தொழில், பனை தொழில், முந்திரி ஆகிய தொழில்களுக்கும் கடன் வழங்க வேண்டும். இந்த கல்லூரியில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கடல் தொழிலை பொருத்தவரை மீனவர்கள் ஒத்துழைப்பு இன்றி செயல்படுத்த முடியாது. ஆகையால் அவர்களோடு இணைந்து அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் போது உங்கள் ஆராய்ச்சி வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும். பேராசிரியர்கள் உங்கள் ஆராய்ச்சிகளை மீனவர்களோடு இணைந்து செயல்படுத்துங்கள் என்று கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறும் போது, முதல்-அமைச்சர் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர வேண்டும் என்று உழைத்து வருகிறார். முதன் முதலாக தூத்துக்குடியில் தான் மீன்வளக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் நாகப்பட்டினத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆகையால் சென்னையில் பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் தாசில்தார் செல்வக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கடல்சார் உணவு பொருட்கள் வணிக மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story