கூடலூர் பாண்டியாறு திட்ட நீரேற்று மையத்தில் மின் மோட்டார்கள் பழுது குடிநீர் வினியோகம் பாதிப்பு


கூடலூர் பாண்டியாறு திட்ட நீரேற்று மையத்தில் மின் மோட்டார்கள் பழுது  குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2022 6:56 PM IST (Updated: 16 May 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பாண்டியாறு குடிநீர் திட்ட நீரேற்று மையத்தில் அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் பழுதடைந்தது.இதனால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூடலூர்

கூடலூர் பாண்டியாறு குடிநீர் திட்ட நீரேற்று மையத்தில் அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் பழுதடைந்தது.இதனால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மின் மோட்டார்கள் பழுது

கூடலூர் நகராட்சி பகுதியில் 21 வார்டுகளில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பகுதியில் ஹெலன், பல்மாடி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூர் நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதேபோல் கூடலூர் இரும்பு பாலம் பகுதியில் பாண்டியாற்றின் கரையோரம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை அதிக சக்தி கொண்ட மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குடிநீர் வடிகால் வாரியத்தின் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாண்டியாறு குடிநீர் திட்ட நீரேற்று மையத்தில் இயங்கி வந்த 2 அதிக சக்தி மின் மோட்டார்கள் திடீரென பழுதடைந்தது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த கூடலூர் நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன், நகராட்சித் தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ் உள்பட குடிநீர் வினியோக ஊழியர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது மின்சார குறைபாட்டால் மின் மோட்டார்கள் முழுமையாக எரிந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மின் மோட்டார்களை கோயம்புத்தூருக்கு கொண்டு சென்று சீரமைக்க உத்தரவிட்டனர். இதன்காரணமாக கடலூர் நகரின் முக்கிய இடங்களில் சில தினங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பாண்டியாறு திட்ட நீரேற்று மையத்தில் இருந்து தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மின்சார குறைபாட்டால் அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட கோழிப்பாலம், நந்தட்டி, 2-ம் மைல், ஆர்.டி.ஓ. அலுவலகம், முத்தமிழ் நகர், மீனாட்சி உள்பட 5 வார்டுகளுக்கு சில நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story