கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்ற 217 விவசாயிகள் கைது


கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்ற 217 விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 16 May 2022 7:26 PM IST (Updated: 16 May 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விவசாய நிலங்கள் வழியாக நான்குவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள் 217 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வரையிலும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலை கையகப்படுத்தும்போது ராஜபாளையம்-புளியரை இடையே சுமார் 1,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், எனவே மாற்றுப்பாதையில் நான்குவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் விவசாயிகள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையொட்டி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்வதற்கு ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சண்முகம், மாநில துணைத்தலைவர் விஜயமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முத்துப்பாண்டியன், விவசாய சங்க மாவட்ட தலைவர் கணபதி, பொருளாளர் முத்துராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், பேரணியாக செல்ல முயன்ற 34 பெண்கள் உள்பட 217 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க ைவத்தனர்.

Next Story