காங்கிரசை பலவீனப்படுத்தும் தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை குறித்து மேலிடத்தில் தெரிவித்துள்ளேன்- நானா படோலே கூறுகிறார்
காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாக நானா படோலே கூறியுள்ளார்.
நாக்பூர்,
காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாக நானா படோலே கூறியுள்ளார்.
காங்கிரஸ் அதிருப்தி
2019-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, பா.ஜனதாவுடன் தனது கூட்டணியை முறித்துக்கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
கொள்கை முரண்பாடு கொண்ட இந்த கட்சிகள் ஆட்சி அமைத்ததில் இருந்தே கூட்டணியில் தங்களது கட்சி ஓரம் கட்டப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் கோண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே தனது அதிருப்தியை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
இந்தநிலையில் ராஜஸ்தானில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நானா படோலேவும் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் , இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போதுமான நிதி இல்லை
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த தேசியவாத காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காங்கிரஸ் பிரதிநிதிகள் வளர்ச்சி பணியை செய்ய போதுமான நிதி வழங்கப்படவில்லை. பிவண்டி- நிஜாம்பூர் மாநகராட்சியை சேர்ந்த 19 காங்கிரஸ் கவுன்சிலர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதுமட்டும் இன்றி இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கோண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கைகோர்த்தது.
இதுகுறித்து அனைத்து தகவலையும் ராஜஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகார பேராசை
மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “காங்கிரசின் உட்கட்சி தேர்தல் தொடங்கிவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர்” என்றார்.
மகா விகாஸ் அகாடி அரசை பாபர் மசூதியிடன் ஒப்பிட்டு அதை வீழ்த்தும்வரை ஓயமாட்டேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், “மகாவிகாஸ் அகாடி ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசாகும். இதுபோன்ற கருத்துகள் அவர்கள் அதிகார பேராசையுடன் இருப்பதை காட்டுகிறது. அரசின் மீது இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது சரியல்ல. இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.
Related Tags :
Next Story