சிதம்பரத்தில் பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து 2 வாலிபர்கள் கைவரிசை


சிதம்பரத்தில்  பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து 2 வாலிபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 16 May 2022 3:00 PM GMT (Updated: 16 May 2022 3:00 PM GMT)

சிதம்பரத்தில் பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து 9 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர்.


சிதம்பரம், 

சிதம்பரம் ஞானப்பிரகாசம் குள கீழக்கரை தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி அன்னாள் கஸ்பால்மேரி (வயது 60). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் இவரது கடைக்கு நேற்று மதியம் 2.30 மணி அளவில், 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

 அதில் ஒருவர் முககவசமும், மற்றொருவர் ஹெல்மெட்டும் அணிந்திருந்தார். அவர்கள் அன்னாள்கஸ்பால்மேரியிடம் ரூ.100-ஐ கொடுத்து தண்ணீர்பாட்டில் வாங்கினர். இதையடுத்து மீதி சில்லரை கொடுப்பதற்காக அன்னாள் கஸ்பால்மேரி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து கொண்டிருந்தார்.


ரூ.3 லட்சம்

 அந்த சமயத்தில் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அன்னாள்கஸ்பால்மேரி கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர். இதில் பதறிய அன்னாள் கஸ்பால்மேரி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 பட்டபகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் தண்ணீர் பாட்டில் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் இருந்து நகையை 2 வாலிபர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story