பருத்தி நூலை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


பருத்தி நூலை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 May 2022 9:20 PM IST (Updated: 16 May 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தனியாக கழகத்தை உருவாக்கி பருத்தி நூலை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

விழுப்புரம், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விழுப்புரம் மண்டல பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பருத்தி கழகம்

தமிழகம் முழுவதும் நூற்பாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அடிப்படை காரணம் பருத்தி நூல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதே ஆகும். மத்திய அரசு சார்பில் செயல்படும் பருத்தி கழகத்தை முறையாக செயல்படுத்தாமல் பல கட்டுப்பாடுகளை போட்டுள்ளதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பருத்தி நூலை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி வைத்து நூல் விலையை உயர்த்தியுள்ளன. எனவே தமிழகத்தில் தனியாக பருத்தி கழகத்தை உருவாக்கி அரசே பருத்தி நூலை நேரடியாக கொள்முதல் செய்து ஆலைகளுக்கு சீரான வினியோகம் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பெண்கள், தேர்வு செய்யப்பட்டிருந்தும் அவர்களை சார்ந்த ஆண்கள்தான் முழு அதிகாரத்தையும் எடுத்துக்கொண்டு எல்லா பணிகளையும் செய்து வருகின்றனர். அப்படியென்றால் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் அங்கு பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களின் வீடுகளை அகற்றுகிறார்கள், கேட்டால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டுகிறார்கள். அப்படியானால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகம் ஒரு ஏரியில்தான் அமைந்திருக்கிறது. அப்படியிருக்கையில் ஏரியில் இருக்கிற வீட்டில் கலெக்டர் உட்கார்ந்துகொண்டு, ஏரியில் இருக்கிற மற்ற வீடுகளை அகற்றச்சொல்வது எந்தவிதத்தில் நியாயம், தர்மம். எனவே நீர்நிலைகளாக பயன்படுத்த முடியாத இடங்களில் அங்கு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். 
சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையை இன்னும் முடுக்கி விட்டு சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து துறை தனியாரிடம் ஒப்படைப்பு என்பதை ஏற்க முடியாது, அனுமதிக்கவும் முடியாது. அந்த நிலை வந்தால் எங்களுடைய மாற்றுக்கருத்தை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story