என்.எல்.சி.யை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்பு, குடிநீரை துண்டித்த என்.எல்.சி.யை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் ஐ.ஐ.டி. நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், சிவாஜி நகர், பட்டு அய்யனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 30-நாட்களுக்கு முன்பு இவர்களது வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், குடிநீர் இணைப்பை திடீரென என்.எல்.சி. நிர்வாகம் துண்டித்துவிட்டது. இவர்களுக்கு மின்சாரம், குடிநீர் வினியோகத்தை மீண்டும் வழங்குதல், மேலும் வடக்குவெள்ளுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையொட்டி என்.எல்.சி. நிர்வாக சுரங்க பகுதி உள்ளதால், அங்குள்ள ஆழ்துளை கிணறு பழுதாகி விடுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம்
எனவே இவர்களுக்கு நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மந்தாரக்குப்பத்தில் நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் நுழைவு வாயிலில் அனைத்து கட்சி போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., த.வா.க., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., முக்குலத்தோர் புலி படை, வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனிக்குழு அமைக்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
என்.எல்.சி. நிர்வாகம் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவில்லை. வட இந்தியாவில் என்ஜினீயரிங் படித்தவர்கள், என்.எல்.சி.யில் பணியில் சேர்ந்து, உயர் பதவியை பெற்றுவிடுகிறார்கள். ஆனால் வீடு, நிலம் கொடுத்தவர்களின் குழந்கைள் என்ஜினீரியங் படித்தால் அவர்கள் இங்கு பயணியாற்ற முடியவில்லை. தினக்கூலியாக தான் வேலை வழங்குகிறார்கள். இதில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து, மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
பா.ஜ.க. தலைவருக்கு தெரியாதா?
மேலும், திருவாரூரில் தேரோடும் வீதிக்கு வைக்காத பெயருக்காக போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு, இந்த நெய்வேலி மக்களின் பிரச்சினை தெரியாமல் போனது எப்படி?.
இனியாவது மக்களின் நிலையை தெரிந்து கொண்டு போராடுவதுடன், பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்து சென்று, இந்த மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்றார் அவர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு என்.எல்.சி.யை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story