அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தளி:
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள அமராவதி பாசன பழைய ராஜ வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அமராவதி ஆற்றை பிரதானமாகக் கொண்டுள்ள 8 பழைய ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
தண்ணீர் திறப்பு
இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து அமராவதி ஆற்று ஷட்டர்கள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
இந்த தண்ணீர் வருகின்ற செப்டம்பர் மாதம் 28-ந்தேதி வரையில் 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் உடுமலை தாலுகாவில் 1,450 ஏக்கரும், மடத்துக்குளம் தாலுகாவில் 6 ஆயிரத்து70 ஏக்கரும் ஆக மொத்தம் 7 ஆயிரத்து 520 நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், ஒன்றிய குழுத்தலைவர் மகாலட்சுமிமுருகன், தாசில்தார் கணேசன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முபாரக்அலி, கதிரேசன், பொதுக்குழு உறுப்பினர் ரவி, தகவல் தொழில் நுட்பஅணி மோகன் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினர், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 56.83 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story