சென்னிமலை, அந்தியூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலை, அந்தியூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலை, அந்தியூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னிமலை
கைத்தறி மற்றும் விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழிலுக்கு பயன்படும் நூல்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஈரோடு டெக்ஸ்டைல் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர் 16, 17 ஆகிய நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனத்தினர் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் சென்னிமலை பகுதியில் விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர், ஆலாம்பாளையம், தவுட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம் உள்பட அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு லுங்கிகள், துண்டுகள், கைக்குட்டைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, சேலம், சென்னை மற்றும் கர்நாடகா, ஒடிசா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். நூல் விலை உயர்வை கண்டித்து அந்தியூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் 2 நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைத்தறிக்கூடங்கள் இயங்காமல் மூடப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இதுதொடர்பாக அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தியூர் தவுட்டுப்பாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி வேலை நிறுத்தத்தை பற்றி விளக்கி கூறினார்.
மேலும் நூல் விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் சங்க செயலாளர் மலைச்சாமி மற்றும் பொருளாளர்கள் நல்லசிவம், கனகராஜ் பேசினர். இதில் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
------
Related Tags :
Next Story