இந்த மாத இறுதிக்குள் பா.ம.க. அரசியல் பயிலரங்க வகுப்புகளை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைப்பார்-ஜி.கே.மணி
இந்த மாத இறுதிக்குள் பா.ம.க. அரசியல் பயிலரங்க வகுப்புகளை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைப்பார் என்று திண்டிவனத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டம் பகுதியில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கம் முன்பு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க. அரசியல் பயிலரங்கம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை வியக்கும்படி செய்தவர். மக்களுக்கு சேவை செய்யும் பிரதிநிதிகள் அரசியல் பணிகளை சிறப்பாக செய்வதற்காக அரசியல் பயிலரங்கம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கொரோனா நோய் பரவுதலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் பயிலரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் தடைபட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில் மீண்டும் பயிற்சி வகுப்புகளை புதுப்பொலிவுடன் தொடங்குவதற்கு முன்னோட்டமாக இந்த கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள், பா.ம.க. அரசியல் பயிலரங்கம் வகுப்புகளை மாநில இளைஞரணி தலைவர் டாக்டா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைப்பார்.
எதிர்பார்ப்பு அதிகம்
இந்த அரசியல் பயிலரங்கம் மூலம் கிளை மற்றும் ஒன்றிய, பேரூர், நகர, மாவட்ட, செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் எம்.எல்.ஏ., எம்.பி, மத்திய மந்திரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
தற்போது ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். தி.மு.க.வின் ஓராண்டு சாதனை என்பது கொரோனா நோயை கட்டுப்படுத்துவதிலேயே ஓடிவிட்டன. இருந்தபோதிலும் கொரோனாவை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story