வவ்வால்களின் சரணாலயமாக விளங்கிய ஆலமரம் வேரோடு சாய்ந்தது
200 ஆண்டுகள் பழமையான வவ்வால்களின் சரணாலயமாக விளங்கிய ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த மரம் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் அடைக்கலம் புகுந்து வசித்து வந்தன. இதனால் வவ்வால்களின் சரணாலயமாகவே இந்த ஆலமரம் விளங்கியது. காலை மாலை நேரங்களில் அந்த வழியாக சென்றால் வவ்வால்கள் எழுப்பும் சத்தம் காதுகளை ரீங்காரமிடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்காக தீபாவளி பண்டிகைக்கு கூட அப்பகுதி மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. அந்த அளவுக்கு வவ்வால்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் தற்போது சரணாலயமாக விளங்கிய பழமையான ஆல மரம் சாய்ந்து விழுந்ததை அறிந்து அந்த பகுதி மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர்.
Related Tags :
Next Story