பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இதையடுத்து பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமாக இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டனர். 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி மேலும் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பணி நீட்டிப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, ஒப்பந்தத்தின்படி பல்கலைக்கழக பணிக்கு மீண்டும் அழைக்க வேண்டும் என கோரி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே பணி நிரவல் ஊழியர் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கதலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் நல்லதம்பி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் 500-க்கும் மேற்பட்ட பணி நிரவல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் என பணி நிரவல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story