தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்


தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2022 10:15 PM IST (Updated: 16 May 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்

தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 309 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

தின்பண்ட கவர்களுக்கு அனுமதி

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், தின்பண்ட தயாரிப்பு, விற்பனை சங்க மாவட்ட தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் தின்பண்ட தயாரிப்புகளான முறுக்கு, எள்ளடை, காராபூந்தி, கடலைமிட்டாய் உள்ளிட்ட பொருட்களை பார்சல் செய்யும் கவர்கள் முதன்மை பேக்கிங் என்று நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் தற்போது 51 மைக்ரான் கொண்ட கவர் மற்றும் நிறுவன முகவரி கொண்டு அச்சிட்ட பிளாஸ்டிக் கவர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். 51 மைக்ரான் பிளாஸ்டிக் கவர் மற்றும் நிறுவன முகவரி கொண்டு அச்சிட்ட கவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்து திருக்கோவில் பாதுகாப்பு கூட்டமைப்பினர் அளித்த மனுவில், சிதம்பரம் தில்லை நடராஜரின் நடனம் குறித்து அவதூறாக பேசி வெளியிட்ட யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். நடராஜரின் நடனத்தை பற்றி தவறாக சித்தரித்து பதிவிட்ட நபரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

வீட்டுமனை பட்டா

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் டெங்குகொசு ஒழிப்பு பணியாளர்கள் அளித்த மனுவில், வேலூர் மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக டெங்குகொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது தினக்கூலியாக ரூ.281 வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக இந்த ஊதியத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடியாத்தம் நகரை சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில், எங்களுக்கு சொந்த வீடோ, வீட்டுமனை பட்டாவோ கிடையாது. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். பலர் எங்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அல்லது இலவச வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், 10 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகள், 3 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், 5 பேருக்கு நவீன செயற்கைக்கால் மற்றும் கைகள் மற்றும் பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வசித்து வரும் வேலூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ரோசிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

Next Story