பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்
தென்காசியில் 195 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி:
தமிழக அரசு சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு துறைகளின் சார்பில் புகைப்பட கண்காட்சி மற்றும் பணி விளக்க கண்காட்சி 16 அரங்குகளில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் வரவேற்று பேசினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறந்த ஆட்சி, வெளிப்படையான ஆட்சி, மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது. அன்றாடம் மக்களை பற்றி சிந்தித்து செயல்படக்கூடிய முதல்-அமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மக்களுக்கு வேண்டிய நன்மைகள் எல்லாம் அவர்களை தேடி வந்து கொண்டிருக்கிறது. மக்கள் அதிகாரிகளை தேடி செல்லும் காலம் இருந்தது. ஆனால் இப்போது அதிகாரிகள் மக்களை தேடி வரும் அளவிற்கு இந்த அரசு செயல்படுகிறது. அதிகாரிகள் மட்டுமல்லாமல் எங்களை போன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களை சந்திக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கண்காட்சி விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை நீங்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் பார்த்து பயனடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் 195 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரத்து 637 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, பேரூராட்சி தலைவர்கள் வேணி, சின்னத்தாய், ஷேக் தாவூது, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இளவரசி நன்றி கூறினார். இந்த கண்காட்சி வருகிற 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story