வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை திருடிய உறவினர் கைது
பொள்ளாச்சி அருகே பொங்காளியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகையை திருடிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பொங்காளியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகையை திருடிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை திருட்டு
பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பந்தகால்யம்மன் பதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி அருள்மொழி (வயது 37). இவர் தோட்டத்து சாலையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வால்பாறையில் உள்ள பாலாஜி கோவிலுக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. ரூ.6 லட்சம் மதிப்புள்ள 24 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
உறவினர் கைது
இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட நபர்கள் நகைகளை திருடி சென்று இருக்க கூடும் என்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ராதாகிருஷ்ணன் உறவினரான கதிர்வேல் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடும்ப கஷ்டத்தால் கடனை அடைக்க முடியாமல் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கதிர்வேலை கைது செய்தனர்.
---
----
Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI
Related Tags :
Next Story